27-10-2019                           காலை முரளி                ஓம் சாந்தி                        அவ்யக்த பாப்தாதா

ரிவைஸ்    28-01-1985          மதுபன்


 

சிவசக்தி பாண்டவசேனையின் சிறப்புகள்

 

இன்று பாப்தாதா அமிர்தவேளையில் இருந்து விசேஷமாக முன்னிலையில் வந்துள்ள தூரதேசத்தில் வசிக்கின்ற, மனதால் அருகில் இருக்கக் கூடிய இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். பாப் (சிவபாபா) மற்றும் தாதா (பிரம்மா பாபா)வுக்கிடையில் இன்று இனிமையான ஆன்மிக உரையாடல் நடந்து கொண்டிருந்தது. எந்த விஷயத்தைப் பற்றி? பிரம்மா தந்தை, விசேஷமாக இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளைப் பார்த்துப் புன்சிரிப்புடன் கூறினார், குழந்தைகளின் அற்புதம் இது, அதாவது இவ்வளவு தூர தேசங்களில் வசிப்பவர்களாக இருந்தாலும் சதா அன்பின் ஒரே ஈடுபாட்டில் இருக்கின்றனர், அதாவது அனைவருக்கும் எந்த விதத்திலாவது பாப்தாதாவின் செய்தியை அவசியம் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்காக அநேக குழந்தைகள் இரட்டைக் காரியம் செய்து கொண்டே, லௌகிக் மற்றும் அலௌகிக் இரண்டிலும் பிஸியாக இருந்தாலும் தங்களின் ஓய்வைக் கூடப் பார்க்காமல் இரவும் பகலும் அதே ஈடுபாட்டில் மூழ்கியுள்ளனர். தங்களின் உணவு-பானத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் சேவையின் ஈடுபாட்டில் மூழ்கியுள்ளனர். எந்தத் தூய்மையின் விஷயத்தை இயற்கைக்கு விரோதமான வாழ்க்கை எனப் புரிந்து கொண்டிருந்தனரோ, அதே தூய்மையைத் தனதாக்குவதற்காக, தூய்மையின்மையைத் தியாகம் செய்வதற்காக தைரியமாக, திட சங்கல்பத்துடன், பாபாவின் அன்பினால், நினைவு யாத்திரை மூலம் சாந்தியின் பிராப்தியினுடைய ஆதாரத்தில், படிப்பு மற்றும் சங்கத்தின் ஆதாரத்தில் தங்களது வாழ்க்கையில் தாரணை செய்துள்ளனர். எதைக் கஷ்டம் எனப் புரிந்து கொண்டிருந்தனரோ, அதை சுலபமாக ஆக்கி விட்டுள்ளனர். பிரம்மா பாபா விசேஷமாகப் பாண்டவ சேனையைப் பார்த்துக் குழந்தைகளின் மகிமையைப் பாடிக் கொண்டிருந்தார். எந்த விஷயத்தைப் பற்றி? ஒவ்வொருவரின் மனதில் உள்ளது -- அதாவது பவித்திரதா (தூய்மை) தான் யோகி ஆவதற்கான முதலாவது சாதனம். பவித்திரதா தான் பாபாவின் அன்பை அனுபவம் செய்வதற்கான சாதனம். பவித்திரதா தான் சேவையில் வெற்றிக்கான ஆதாரம். இந்த சுப சங்கல்பம் ஒவ்வொருவரின் மனதில் பக்காவாக (உறுதி) உள்ளது. மேலும் பாண்டவரின் அற்புதம் இது -- அவர்கள் சக்திகளை முன்னால் வைத்தாலும் கூட, தங்களை முன்னேற்றத்தில் கொண்டு செல்வதற்கான ஊக்கம்-உற்சாகத்தில் சென்று கொண்டுள்ளனர். பாண்டவர்களின் தீவிர புருஷார்த்தம் செய்வதற்கான வேகம், நல்ல முன்னேற்றத்தை அடையக் கூடியதாகக் காணப் படுகிறது. பெரும்பான்மையானவர்கள் இதே வேகத்தில் முன்னேறிச் சென்று கொண்டே இருக்கின்றனர்.

 

சிவதந்தை கூறினார் -- பாண்டவர்கள் தங்களின் விசேஷ மரியாதை கொடுப்பதற்கான ரிக்கார்டை நன்கு காட்டியுள்ளனர். அதோடு கூடவே இதைப் பற்றிய விஷயத்தையும் கூறினார் -- இடையிடையே சம்ஸ்காரங்களின் விளையாட்டையும் ஆடி விடுகின்றனர். ஆனால் பிறகும் கூட முன்னேற்றத்திற்கான ஊக்கத்தின் காரணத்தால் பாபாவிடம் அதிக அன்பு இருக்கும் காரணத்தால், அன்பிற்குப் பின்னால் இந்த மாற்றம் தான் பாபாவுக்குப் பிரியமானது என்று புரிந்து கொண்டிருப்பதால் சமர்ப்பணமாகி விடுகின்றனர். பாபா எதைச் சொல்கிறாரோ, எதை விரும்புகிறாரோ, அதையே செய்வோம் என்ற இந்த சங்கல்பத்தினால் தங்களைத் தாங்களே மாற்றிக் கொண்டு விடுகின்றனர். அன்பு இருப்பதால் முயற்சி என்பது முயற்சியாகவே தோன்றாது. அன்பு இருப்பதால் சகித்துக் கொள்வது என்பதும் சகித்துக் கொள்வதாகவே தோன்றாது. எனவே பிறகும் கூட பாபா-பாபா என்று சொல்க் கொண்டே முன்னேறிச் சென்று கொண்டே இருக்கின்றனர். இந்தப் பிறவியின் சரீரம் சார்ந்த சம்ஸ்கார புருஷத்துவம், அதாவது எல்லைக்குட்பட்ட படைப்பு சார்ந்தவராக இருந்த போதிலும் தங்களை நல்லபடியாக மாற்றிக் கொண்டுள்ளனர். படைப்பவர் தந்தையை முன்னால் வைக்கிற காரணத்தால் நிரகங்காரி மற்றும் பணிவு பாவனை, இந்த தாரணையின் லட்சியம் மற்றும் லட்சணத்தை நன்கு தாரணை செய்துள்ளனர் மற்றும் செய்து கொண்டுள்ளனர். உலகத்தின் சூழ்நிலைக்கு நடுவே தொடர்பில் வந்தாலும், பிறகும் கூட நினைவின் ஈடுபாட்டினுடைய குடைநிழல் இருக்கும் காரணத்தால் பாதுகாப்பாக இருப்பதற்கான நிரூபணத்தை நன்கு கொடுத்துக் கொண்டுள்ளனர். பாண்டவர்களின் விஷயத்தைக் கேட்டீர்கள் இல்லையா? பாப்தாதா இன்று பிரியதர்ஷனுக்குப் பதிலாகப் பிரியதர்ஷினி ஆகி விட்டுள்ளனர். அதனால் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றனர். இருவருக்குமே குழந்தைகளிடம் விசேஷ அன்போ உள்ளது இல்லையா? ஆக, இன்று அமிர்தவேளையிலிருந்து குழந்தைகளின் சிறப்புகள் மற்றும் குணங்களின் மாலையை நினைவு செய்தார். நீங்கள் 63 பிறவிகளாக மாலைகளை உருட்டினீர்கள். இப்போது பாபா அதற்குப் பிரதிபலனாக மாலையை நினைவு செய்து பதிலளிக்கிறார்.

 

நல்லது, சக்திகளின் எந்த மாலையை நினைவு செய்தார்? சக்தி சேனையின் மிக அதிக விசேஷதா இது தான் -- அன்போடு, ஒவ்வொரு நேரமும் ஒரு தந்தையின் அன்பில் மூழ்கி இருந்து, சர்வ சம்மந்தங்களின் அனுபவங்களில் நல்ல ஈடுபாட்டோடு இருந்து, முன்னேறிக் கொண்டுள்ளனர். ஒரு கண்ணில் பாபா, இன்னொரு கண்ணில் சேவை, இரண்டு கண்களிலும் சதா இது தான் நிறைந்துள்ளது. விசேஷம் மாற்றம் இது தான் -- தனது கவனக்குறைவு, மென்மைத் தன்மையைத் தியாகம் செய்துள்ளனர். தைரியம் உள்ள சக்தி சொரூபம் ஆகியுள்ளனர். பாப்தாதா இன்று விசேஷமாக சின்னச்சின்ன வயதுள்ள சக்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த இளமைப் பருவத்தில் அநேக விதமான அல்பகாலக் கவர்ச்சிகளை விட்டு, ஒரு தந்தையின் கவர்ச்சியில் நல்ல ஊக்கம்-உற்சாகத்தில் சென்று கொண்டுள்ளனர். உலகத்தை சாரமற்ற உலகமாக அனுபவம் செய்து, பாபாவையே உலகமாக ஆக்கி விட்டுள்ளனர். தன்னுடைய உடல்-மனம்-செல்வத்தை, தந்தை மற்றும் சேவையில் ஈடுபடுத்துவதால் பிராப்தியை அனுபவம் செய்து, முன்னால் பறக்கும் கலையில் சென்று கொண்டுள்ளனர். சேவையின் பொறுப்பு என்ற கிரீடத்தை நன்கு தாரணை செய்துள்ளனர். களைப்பை அவ்வப்போது அனுபவம் செய்தாலும், புத்தியில் அவ்வப்போது சுமையை அனுபவம் செய்தாலும் கூட, பாபாவைப் பின்பற்றியே தீர வேண்டும், பாபாவைப் பிரத்தியட்சம் (வெளிப்படுத்த) செய்தேயாக வேண்டும் என்ற இந்த உறுதியின் மூலம் இந்த அனைத்து விஷயங்களையும் முடித்து விட்டு, பிறகும் வெற்றியை அடைந்து கொண்டிருக்கின்றனர். எனவே பாப்தாதா எப்போது குழந்தைகளின் அன்பைப் பார்க்கிறாரோ, அப்போது அடிக்கடி இதே வரதானத்தைத் தான் தருகிறார் -- தைரியம் வைத்தால் தந்தை உதவி செய்வார். வெற்றி உங்களது பிறப்புரிமையே தான். பாபாவின் துணை இருப்பதால் ஒவ்வொரு பரஸ்திதியையும் வெண்ணெயிலிருந்து முடியை எடுப்பது போல் கடந்து சென்று விடுகின்றனர். வெற்றி என்பது குழந்தைகளின் கழுத்து மாலையாகவே உள்ளது. வெற்றி மாலை குழந்தைகளாகிய உங்களை வரவேற்பதாக உள்ளது. ஆக, குழந்தைகளின் தியாகம், தபஸ்யா மற்றும் சேவை மீது பாப்தாதாவும் சமர்ப்பணமாகி விடுகிறார். அன்பின் காரணத்தால் எந்த ஒரு கடினமும் அனுபவம் செய்வதில்லை. அப்படித் தான் இல்லையா? எங்கே அன்பு உள்ளதோ, அன்பின் உலகத்தில் அல்லது பாபாவின் உலகத்தில் பாபாவின் மொழியில் கடினம் என்ற சொல்லே கிடையாது. சக்திசேனையின் விசேஷதா, கடினம் என்பதை சுலபமாக்கி விடுவதாகும். ஒவ்வொருவரின் மனதிலும் இதே ஊக்கம் உள்ளது அனைவரை விடவும் அதிகமாக மற்றும் வெகு சீக்கிரமாக செய்தி கொடுப்பதற்கு நிமித்தமாகி, பாபா முன்னிலையில் ரோஜாப் பூச்செண்டைக் கொண்டுவர வேண்டும். எப்படி பாபா நம்மை ஆக்கியிருக்கிறாரோ, அது போல் நாம் மற்றவர்களை உருவாக்கி பாபாவுக்கு முன்னால் கொண்டுவர வேண்டும். சக்திசேனை ஒருவர் மற்றவரின் சகயோகத்தினால் குழு ரூபத்தில் பாரதத்திலிருந்தும் ஏதேனும் விசேஷத்தை வெளிநாடுகளில் செய்வதற்கான சுப ஊக்கத்தில் உள்ளனர். எங்கே சங்கல்பம் உள்ளதோ, அங்கே வெற்றி அவசியம் இருக்கும். சக்திசேனையில் ஒவ்வொருவரும் தங்களின் வெவ்வேறு இடங்களில் விருத்தி மற்றும் சித்தியை அடைவதில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள், பெற்றுக் கொண்டே இருப்பார்கள். ஆக, இருவரின் அன்பைப் பார்த்து, சேவையின் ஊக்கத்தைப் பார்த்து பாப்தாதா மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரின் குணங்களை எவ்வளவு பாடுவது, ஆனால் வதனத்தில் ஒவ்வொரு குழந்தையின் குணங்களை பாப்தாதா வர்ணனை செய்து கொண்டிருந்தார். பாரத தேசத்னர் யோசித்து-யோசித்து அநேகர் இருந்து விடுவார்கள். ஆனால்  வெளிநாட்டினர் தெரிந்து கொண்டு அதிகாரி ஆகி விட்டுள்ளனர். அவர்கள் பார்த்துக் கொண்டே இருந்து விடுவார்கள். நீங்கள் பாபாவுடன் கூட வீட்டுக்குச் சென்று சேர்ந்து விடுவீர்கள். அவர்கள் கதறுவார்கள். ஆனால் நீங்கள் வரதானங்களின் திருஷ்டி மூலம் பிறகும் ஏதாவது அஞ்ச(தேற்றுதல்) கொடுத்துக் கொண்டே இருப்பீர்கள்.

 

ஆக, இன்று பாப்தாதா விசேஷமாக என்ன செய்தார் என்பதைப் பார்த்தீர்களா? குழு முழுவதையும் பார்த்து பாப்தாதா குழந்தைகள் தங்களின் பாக்கியத்தை உருவாக்கிக் கொள்ளும் மகிமையைப் பாடிக்கொண்டிருந்தார். தூரத்திருந்தவர்கள் நெருக்கத்தில் வந்து விட்டனர் மற்றும் அருகில் அபுவில் இருப்பவர்கள் எவ்வளவு தூரமாகி விட்டனர்! அருகில் இருந்த போதிலும் தூரத்தில் உள்ளனர். ஆனால் நீங்கள் தூரத்தில் இருந்த போதும் அருகில் இருக்கிறீர்கள். அவர்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பவர்கள், நீங்கள் மன சிம்மாசனத்தில் சதா இருப்பவர்கள். எவ்வளவு அன்போடு மதுபன் வருவதற்கான சாதனங்களைத் தயார் செய்கிறீர்கள்! ஒவ்வொரு மாதமும் இதே பாடலைப் பாடுகிறீர்கள் -- பாபாவோடு சந்திக்க வேண்டும், போக வேண்டும். சேமித்துக் கொள்ள வேண்டும். ஆக, இந்த ஈடுபாடும் கூட மாயாஜீத் ஆவதற்கான சாதனம் ஆகி விடுகிறது. சுலபமாக டிக்கெட் கிடைத்து விடுமானால் இவ்வளவு ஈடுபாட்டில் அதிக விக்னம் ஆகி விடும். ஆனால் துளித்துளியாக குளத்தை நிரப்புகிறீர்கள். ஆகவே துளித்துளியாக சேமிப்பதில் பாபாவின் நினைவு நிறைந்துள்ளது. ஆக, இதுவும் டிராமாவில் நடப்பது நன்மைக்காகத் தான். அதிகம் பைசா கிடைத்து விடுமானால் பிறகு மாயா வந்து விடும். பிறகு சேவை மறந்து போகும். எனவே செல்வந்தர்கள் பாபாவின் அதிகாரி குழந்தைகளாக ஆவதில்லை.

 

சம்பாதித்தீர்கள். சேமித்தீர்கள். தனது உண்மையான வருமானத்தை சேமிப்பதில் தான் பலம் உள்ளது. உண்மையான வருமானத்தின் செல்வம் பாபாவின் காரியத்தில் பயனுள்ளதாகிறது. சும்மா அப்படியே பணம் வந்து விட்டால் உடல் ஈடுபடாது. உடல் ஈடுபடா விட்டால் மனமும் மேலே-கீழே ஆகி விடும். அதனால் உடல்-மனம்-செல்வம் மூன்றும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. ஆகவே சங்கமயுகத்தில் சம்பாதித்தீர்கள், ஈஸ்வரிய பேங்க்கில் சேமித்தீர்கள். இந்த வாழ்க்கை தான் நம்பர் ஒன் வாழ்க்கை! சம்பாதித்தீர்கள் மற்றும் லௌகிக் விநாசி பேங்க்குகளில் சேமித்தீர்கள் என்றால் அது பயனுள்ளதாக ஆவதில்லை. சம்பாதித்தீர்கள் மற்றும் அவிநாசி பேங்க்கில் சேமித்தீர்கள் என்றால் ஒன்று பல மடங்காக ஆகிறது. 21 பிறவிகளுக்காக சேமிப்பாகி விடுகிறது. மனப்பூர்வமாக செய்யப் பட்டது திலாராமின் அருகில் வந்து சேர்கிறது. யாராவது மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காகச் செய்கிறார்கள் என்றால் காண்பிப்பதிலேயே முடிந்து போகும். திலாராம் வரை வந்து சேராது. ஆகவே நீங்கள் மனதார செய்யக்கூடிய நல்லவர்கள். மனதார இரண்டு செய்பவர்கள் கூட பல கோடிக்கு அதிபதி ஆகி விடுகின்றனர். மனதின் வருமானம், அன்பின் வருமானம் உண்மையான வருமானம். சம்பாதிப்பது எதற்காக? சேவைக்காக, தனது ஓய்வுக்காக இல்லை. ஆக, இது உண்மையான மனதின் வருமானம். அது ஒன்று என்றாலும் பல மடங்காக ஆகி விடுகிறது. தனது ஓய்வுக்காக சம்பாதிக்கிறீர்கள் அல்லது சேமிக்கிறீர்கள் என்றால் இங்கே ஓய்வெடுப்பீர்கள். ஆனால் அங்கே மற்றவர்களுக்கு ஓய்வு கொடுப்பதற்கு நிமித்தமாகி விடுவீர்கள். தாச-தாசிகள் என்ன செய்வார்கள்? இராஜ குடும்பத்திற்கு ஓய்வு கொடுப்பதற்காக இருப்பார்கள் இல்லையா? இங்கே உள்ள ஓய்வினால் அங்கே ஓய்வளிப்பதற்கு நிமித்தமாக வேண்டியதிருக்கும். ஆகவே எதை அன்போடு, உண்மையான உள்ளத்தோடு சம்பாதிக்கிறீர்கள் மற்றும் சேவையில் ஈடுபடுத்துகிறீர்களோ, அதைத் தான் பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அநேக ஆத்மாக்களின் ஆசிர்வாதங்களை அடைந்து கொண்டிருக்கிறீர்கள். யாருக்கு நிமித்தமாகிறீர்களோ, அவர்கள் தாம் பிறகு உங்களுக்கு பக்தர்களாகி உங்களுக்குப் பூஜை செய்வார்கள். ஏனென்றால் நீங்கள் அந்த ஆத்மாக்களுக்காக சேவை செய்தீர்கள் என்றால் சேவைக்கான பிரதிபலனாக அவர்கள் உங்கள் ஜட சித்திரங்களுக்கு சேவை செய்வார்கள்! பூஜை செய்வார்கள்! 63 பிறவிகளுக்கு சேவையின் பிரதிபலனை உங்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். பாபாவிடமிருந்தோ கிடைக்கத் தான் செய்யும். ஆனால் அந்த ஆத்மாக்களிடமிருந்தும் கிடைக்கும். யாருக்கு செய்தி கொடுக்கிறீர்களோ, அவர்கள் அதிகாரி ஆகவில்லை என்றால் பிறகு அவர்கள் இந்த ரூபத்தில் பிரதிபலனைக் கொடுப்பார்கள். யார் அதிகாரி ஆகிறார்களோ, அவர்களோ உங்கள் சம்மந்தங்களில் வந்து விடுவார்கள். சிலர் சம்மந்தத்தில் வந்து விடுவார்கள். சிலர் பக்தராகி விடுவார்கள். சிலர் பிரஜை ஆகி விடுவார்கள். பலவிதமான முடிவுகள் வெளிப்படுகின்றன. புரிந்ததா? மனிதர்களும் கேட்கிறார்கள் இல்லையா -- நீங்கள் சேவைக்குப் பின்னாலேயே ஏன் போகிறீர்கள்? சாப்பிடுங்கள், அருந்துங்கள், மகிழ்ச்சி கொண்டாடுங்கள். என்ன கிடைக்கிறதோ, அதை இரவும் பகலும் சேவையிலேயே ஈடுபடுத்துகிறீர்களே? பிறகு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எங்களுக்கு என்ன கிடைத்துள்ளதோ, அதை அனுபவம் செய்து பாருங்கள். அனுபவி தான் இந்த சுகத்தைப் பற்றி அறிவார்கள். இந்தப் பாடலைப் பாடுகிறீர்கள் இல்லையா? நல்லது.

 

சதா அன்பில் மூழ்கி இருக்கக் கூடிய, சதா தியாகத்தை பாக்கியமாக அனுபவம் செய்யக்கூடிய, சதா ஒன்றைப் பல மடங்காக ஆக்கக் கூடிய, சதா பாப்தாதாவைப் பின்பற்றக் கூடிய, பாபாவை உலகம் என அனுபவம் செய்யக் கூடிய அத்தகைய மனசிம்மாசனதாரிக் குழந்தைகளுக்கு திலாராம் தந்தையின் அன்பு நினைவு மற்றும் நமஸ்தே!

 

வெளிநாட்டு சகோதர-சகோதரிகளுடன் தனிப்பட்ட உரையாடல் :

1)தங்களை பாக்கியவான் ஆத்மா எனப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? இவ்வளவு பாக்கியத்தையோ உருவாக்கியிருக்கிறீர்கள் -- பாக்யவிதாதாவின் இருப்பிடம் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். இது எத்தகைய இருப்பிடம் எனப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? சாந்தியின் இருப்பிடத்தில் வந்து சேர்வதும் கூட பாக்கியம் தான். இந்த பாக்கியத்தை அடைவதற்கான வழி திறந்து வைக்கப் பட்டுள்ளது. டிராமாவின் அனுசாரம் பாக்கியத்தை அடைவதற்கான இருப்பிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். பாக்கியத்தின் ரேகை இங்கே தான் வரையப்படுகிறது. ஆக, தங்களின் சிரேஷ்ட பாக்கியத்தை உருவாக்கிக் கொண்டீர்கள்.

 

இப்போது கொஞ்சம் சமயம் கொடுங்கள். சமயமும் உள்ளது. மேலும் துணையிலும் (சங்கத்தில்) சேர முடியும். வேறு கஷ்டமான விஷயமோ கிடையாது. எது கஷ்டமாக உள்ளதோ, அதற்காகக் கொஞ்சம் யோசிக்கப் படுகிறது. சுலபம் என்றால் செய்யுங்கள். இதனால் வாழ்க்கையில் என்னவெல்லாம் அல்பகால ஆசைகள் அல்லது இச்சைகள் உள்ளனவோ, அவை அனைத்தும் அவிநாசி பிராப்தியில் நிறைவேறி விடும். இந்த அல்பகால இச்சைகளுக்குப் பின்னால் போவது என்பது தனது நிழலின் பின்னால் செல்வதாகும். எவ்வளவு நிழலின் பின்னால் செல்கிறீர்களோ, அவ்வளவு அது முன்னால் சென்று கொண்டே இருக்கும். அதை அடைய முடியாது. ஆனால் நீங்கள் முன்னேறிச் சென்று கொண்டே இருப்பீர்களானால் அது தானாகவே உங்களுக்குப் பின்னால்-பின்னால் வந்து கொண்டிருக்கும். ஆக, அத்தகைய அவிநாசி பிராப்தியின் பக்கம் செல்கிறவர் பின்னால் விநாசி விஷயங்கள் அனைத்தும் பூர்த்தியாகி விடும். புரிந்ததா? சர்வ பிராப்திகளுக்கான சாதனம் இது தான். கொஞ்ச சமயத்தின் தியாகம் சதா காலத்திற்கான பாக்கியத்தை உருவாக்குகிறது. ஆகவே சதா இதே லட்சியத்தைப் புரிந்து கொண்டு, முன்னேறிச் சென்று கொண்டே இருங்கள். இதனால் அதிக குஷியின் கஜானா கிடைக்கும். வாழ்க்கையில் அனைத்திலும் பெரியதிலும் பெரிய கஜானா குஷியாகும். ஆக, அவிநாசி குஷியின் கஜானாவை நீங்கள் அடைய முடியும்.

 

2)பாப்தாதா குழந்தைகளின் சதா முன்னேறிச் செல்வதற்கான ஊக்கம்-உற்சாகத்தைப் பார்க்கிறார். குழந்தைகளின் ஊக்கம் பாப்தாதாவிடம் வந்து சேர்கிறது. குழந்தைகளுக்கு உள்ளுக்குள் உள்ளது -- உலகத்தின் வி.வி..பி.யை பாப்தாதாவுக்கு முன்னிலையில் கொண்டு வருவேன். இந்த ஊக்கமும் கூட நனவாகிக் கொண்டே போகும். ஏனென்றால் சுயநலமற்ற சேவையின் பலன் அவசியம் கிடைக்கிறது. சேவை தான் சுயத்தின் ஸ்டேஜை உருவாக்குகிறது. ஆகவே இது போல் ஒரு போதும் யோசிக்காதீர்கள் -- சேவை இவ்வளவு பெரியதாக உள்ளது, என்னுடைய ஸ்டேஜோ (ஸ்திதி) அது போல் இல்லை என்பதாக. ஆனால் சேவை உங்களது ஸ்டேஜை உருவாக்கி விடும். மற்றவர்களுக்குச் செய்யும் சேவை தான் சுய முன்னேற்றத்திற்கான சாதனமாகும். சேவை தானாகவே சக்திசாலி அவஸ்தாவை (நிலை) அமைத்துக் கொண்டே இருக்கும். பாபாவின் உதவி கிடைக்கிறது இல்லையா? பாபாவின் உதவி கிடைத்துக் கொண்டே அந்த சக்தி அதிகரித்துக் கொண்டே அந்த ஸ்டேஜும் அமைந்து விடும். புரிந்ததா? ஆகவே இதை ஒரு போதும் யோசிக்காதீர்கள் இவ்வளவு சேவையை நான் எப்படி செய்வேன்? என்னுடைய ஸ்டேஜ் அந்த மாதிரி உள்ளது. அப்படி இல்லை. செய்து கொண்டே செல்லுங்கள். பாப்தாதாவின் வரதானம் -- முன்னேறிச் சென்றேயாக வேண்டும். சேவையின் இனிய பந்தனமும் கூட முன்னேறுவதற்கான சாதனமாகும். யார் மனப்பூர்வமாக மற்றும் அனுபவத்தின் அத்தாரிட்டியுடன் பேசுகிறார்களோ, அவர்களின் குரல் மனம் வரை சென்றடையும். அனுபவத்தின் அத்தாரிட்டியின் பேச்சு மற்றவர்களுக்கு அனுபவம் செய்வதற்கான பிரேரணை (தூண்டுதல்) தருகிறது. சேவையில் முன்னேறிக் கொண்டே செல்லும் போது என்ன பரீட்சைப் பேப்பர் வருகிறதோ, அதுவும் முன்னேறச் செய்வதற்கான சாதனமாகும். ஏனென்றால் புத்தி வேலை செய்கிறது, நினைவில் இருப்பதற்கான கவனம் உள்ளது. ஆக, இதுவும் கூட விசேஷ லிஃப்ட் ஆகி விடுகிறது. நாம் சூழ்நிலையை எப்படி சக்திசாலி ஆக்குவது என்ற சிந்தனை சதா புத்தியில் உள்ளது. எத்தகைய பெரிய வடிவத்தை எடுத்து விக்னம் (தடைகள்) வந்தாலும் சிரேஷ்ட ஆத்மாக்கள் உங்களுக்கு அதில் நன்மையே உள்ளது. அந்தப் பெரிய ரூபம் கூட நினைவின் சக்தியால் சிறியதாகி விடும். அது பேப்பரில் செய்த சிங்கம் போல. நல்லது.

 

வரதானம்

தீபாவளி அன்று யதார்த்த விதி மூலம் தனது தெய்விகப் பதவியை வரவழைக்கக் கூடிய பூஜைக்குரிய ஆத்மா ஆகுக!

 

தீபாவளிக்கு முன்பெல்லாம் மக்கள் விதிப்பூர்வமாக தீபங்களை ஏற்றி வைத்தனர். தீபங்கள் அணையாமல் இருப்பதற்காக நெய் விட்டனர். விதிப்பூர்வமாக வரவழைக்கும் அப்பியாசத்தில் இருந்தனர். இப்போதோ தீபத்திற்குப் பதில் மின்சார பல்பை எரிய விடுகின்றனர். தீபாவளி கொண்டாடுவதில்லை. இப்போதோ வெறும் மனமகிழ்ச்சியின் கொண்டாட்டமாக ஆகி விட்டது. வரவழைக்கும் விதி, அதாவது சாதனை முடிந்து போய் விட்டது. அன்பு முடிந்துபோய் வெறுமனே சுயநலம் மட்டுமே மிஞ்சியுள்ளது. எனவே யதார்த்த வள்ளல் ரூபதாரி லட்சுமி யாரிடமும் வருவதில்லை. ஆனால் அனைவரும் யதார்த்த விதி மூலம் தங்களின் தெய்வீகப் பதவியை வரவழைக்கிறீர்கள். அதனால் சுயம் பூஜைக்குரிய தேவி-தேவதை ஆகி விடுகிறீர்கள்.

 

சுலோகன்

சதா எல்லையற்ற விருத்தி (உள்ளுணர்வு), திருஷ்டி மற்றும் ஸ்திதி இருக்குமானால் உலக நன்மையின் காரியம் நிறைவேறி விடும்.

 

ஓம்சாந்தி