24-01-2021 காலை முரளி ஓம் சாந்தி "அவ்யக்த பாப்தாதா" ரிவைஸ் 17.10.87


பிராமண வாழ்க்கையின் அலங்காரம் – தூய்மை

இன்று பாப்தாதா தங்களுடைய விஷ்வத்தின் நாலாபுறங்களிலும் இருக்கக்கூடிய விசேˆமான பூஜைக்குரியவர்களாக ஆகப்போகின்ற குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். முழு விஷ்வத்தில் எவ்வளவு குறைவானவர்கள் விலைமதிப்பற்ற இரத்தினங்களாக, பூஜைக்குரியவர் களாக ஆகியிருக்கின்றார்கள்! பூஜிக்கத்தக்க ஆத்மாக்களே உலகத்திற்கு விசேˆமாக ஒளியைக் கொடுக்கும் கண்மணிகள் ஆகின்றார்கள். எவ்வாறு இந்த சரீரத்தில் கண்மணி இல்லை என்றால் வெளிச்சம் இல்லையோ, அவ்வாறு விஷ்வத்தில் பூஜிக்கத்தக்க, உலகின் ஒளியான சிரேஷ்ட ஆத்மாக் களாகிய நீங்கள் இல்லாமல் விஷ்வத்திற்கும் மகத்துவம் இல்லை. தங்கயுகம் அல்லது ஆதியுகம் அல்லது சதோபிரதான யுகம், புதிய உலகம் விசேˆ ஆத்மாக்களாகிய உங்களுடன் தான் ஆரம்பம் ஆகின்றது. புதிய உலகத்தின் ஆதாரமூர்த்தி, பூஜிக்கத்தக்க ஆத்மாக்கள் நீங்கள் ஆவீர்கள். எனவே, ஆத்மாக்களாகிய உங்களுக்கு எவ்வளவு மகத்துவம் உள்ளது! பூஜைக்குரிய ஆத்மாக்களாகிய நீங்கள் உலகிற்கு புதிய வெளிச்சம் ஆவீர்கள். உங்களுடைய முன்னேற்றக் கலை உலகத்தை சிரேஷ்டமான கலையில் கொண்டு வருவதற்கு நிமித்தம் ஆகிறது. நீங்கள் இறங்கும் கலையில் வருகிறீர்கள் எனில், உலகிற்கும் இறங்கும் கலை ஏற்பட்டுவிடுகிறது. நீங்கள் மாறுகின்றீர்கள் என்றால் உலகமும் மாறி விடுகிறது. அந்தளவு மகான் மற்றும் மகத்துவம் உடைய ஆத்மாக்கள் ஆவீர்கள்.

இன்று பாப்தாதா அனைத்து குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு இருந்தார்கள் பிராமணன் ஆகுவது என்றால் பூஜிக்கத்தக்கவராக ஆகுவது என்று அர்த்தம். ஏனெனில், பிராமணரிலிருந்து தேவதை ஆகின்றீர்கள், மேலும், தேவதைகள் என்றால் பூஜிக்கத்தக்கவர்கள். அனைத்து தேவதை களும் பூஜிக்கத்தக்கவர்களே, ஆனாலும், அவசியம் வரிசைக்கிரமமாக உள்ளனர். சில தேவதை களுக்கு பூஜையானது முறைப்படி மற்றும் நியமப்படி நடக்கிறது மற்றும் சிலருடைய பூஜையானது முறைப்படி, நியமப்படி நடப்பதில்லை. சிலருடைய ஒவ்வொரு கர்மத்திற்கும் பூஜை நடக்கிறது மற்றும் சிலருடைய ஒவ்வொரு கர்மத்திற்கும் பூஜை நடப்பதில்லை. சிலருக்கு முறைப்படி ஒவ்வொரு தினமும் அலங்காரம் நடக்கிறது மற்றும் சிலருக்கு அலங்காரமானது தினமும் செய்யப்படுவதில்லை, மேலோட்டமாக கொஞ்சம் அலங்காரம் செய்கின்றார்கள், ஆனால், முறைப்படி செய்வதில்லை. சிலருக்கு முன் முழு நாளும் கீர்த்தனை பாடப்படுகிறது மற்றும் சிலருக்கு முன் அவ்வப்போது கீர்த்தனை பாடப்படுகிறது. இந்த அனைத்திற்குமான காரணம் என்ன? அனைவருமே பிராமணர்கள் என்று அழைக்கப்படுகின்றனர், ஞானம் யோகத்தின் படிப்பை அனைவரும் படிக்கின்றனர், ஆனாலும், இவ்வளவு வித்தியாசம் ஏன்? தாரணை செய்வதில் வித்தியாசம் உள்ளது. பிறகும் கூட விசேஷமாக எந்த தாரணைகளின் ஆதாரத்தில் வரிசைக்கிரமமாக ஆகின்றனர், அறிவீர்களா?

பூஜிக்கத்தக்கவராக ஆகுவதற்கான விசேˆ ஆதாரம் தூய்மை ஆகும். எந்தளவு அனைத்து விதமான தூய்மையை தனதாக்குகின்றார்களோ, அந்தளவே அனைத்து விதமான பூஜைக்குரிய வர்களாகவும் ஆகின்றனர். மேலும், யார் நிரந்தரமாக முறைப்படி ஆதி, அனாதி விசேˆ குணத்தின் ரூபத்தில் தூய்மையை சகஜமாக தனதாக்குகின்றார்களோ, அவர்களே முறைப்படியான பூஜைக்குரிய வர்களாக ஆகின்றனர். அனைத்து விதமான தூய்மை என்றால் என்ன? ஆத்மாக்கள் சுலபமாக, தானாக ஒவ்வொரு எண்ணத்தில், பேச்சில், கர்மத்தில், ஞானி மற்றும் அஞ்ஞானி ஆத்மாக்கள் ஆகிய அனைவருடைய தொடர்பில், சதா தூய்மையான விருத்தி (உள்ளுணர்வு), திருஷ்டி, அதிர்வலைகள் (வைப்பிரேˆன்) மூலம் யதார்த்தமான தொடர்பு மற்றும் சம்பந்தத்தை பரிபாலனை செய்கின்றார்கள் எனில், இதையே அனைத்து விதமான தூய்மை என்று கூறப்படுகிறது. கனவிலும் கூட தனக்காகவோ அல்லது வேறு எந்த ஆத்மாவிற்காகவோ அனைத்து விதமான தூய்மையிலிருந்து எந்தவொரு குறைபாடும் இருக்கக் கூடாது. கனவில் கூட பிரம்மச்சரியம் துண்டிக்கப்படுகிறது அல்லது யாரோ ஒரு ஆத்மாவிற்காக ஏதோ ஒரு விதமான பொறாமை அல்லது ஆவேசத்திற்கு வசமாகி கர்மம் செய்யப்பட்டுவிடுகிறது அல்லது பேச்சு வெளிப்பட்டுவிடுகிறது, நடத்தை கோபத்தின் அம்ச ரூபத்தில் இருக்கிறது என்றால் இது கூட தூய்மை துண்டிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படும். கனவினுடைய பிரபாவம் கூட ஏற்படுகிறது எனில் சாகாரத்தில் செய்யப்பட்ட கர்மத்தின் பிரபாவம் எவ்வளவு ஏற்படும், சிந்தியுங்கள். ஆகையினால், உடைந்த மூர்த்தி ஒருபொழுதும் பூஜைக்குரியதாக ஆவதில்லை. உடைந்த மூர்த்திகள் கோவில்களில் இருக்காது, தற்காலத்து அருங்காட்சியகங்களில் இருக்கின்றன. அங்கு பக்தர்கள் வரமாட்டார்கள். மிகப் பழமையான மூர்த்திகள் இருக்கின்றன என்ற இந்த மகிமை மட்டுமே இருக்கும், அவ்வளவுதான். அவர்கள் ஸ்தூல அவையங்கள் உடைந்திருக்கும் மூர்த்தியை உடைபட்ட மூர்த்தியாகக் கூறுகின்றனர், ஆனால், உண்மையில் ஏதாவது ஒருவித தூய்மையில் குறை இருக்கிறது எனில், அவர்கள் பூஜைக்குரிய பதவியில் இருந்து துண்டிக்கப்பட்டவர் ஆகிவிடுகின்றனர். இவ்வாறு நான்கு விதமான தூய்மை முறைப்படி இருக்கிறது என்றால் பூஜையும் முறைப்படி நடக்கும்.

எண்ணம், சொல், செயல் (செயலில் சம்பந்தம், தொடர்பு வந்துவிடுகிறது) மற்றும் கனவிலும் கூட தூய்மை இருக்க வேண்டும், இதையே சம்பூரணத் தூய்மை என்று சொல்லப்படுகிறது. சில குழந்தைகள் கவனக்குறைவில் வரும் காரணத்தினால் பெரியவர்களையோ அல்லது சிறியவர் களையோ, என்னுடைய உணர்வு மிகவும் நன்றாக உள்ளது ஆனால், வார்த்தை வெளிப்பட்டுவிட்டது, அல்லது எனது இலட்சியம் அப்படி இல்லை, ஆனால், நடந்துவிட்டது, அல்லது விளையாட்டாக சொல்லிவிட்டேன் அல்லது செய்துவிட்டேன் என்று கூறுகின்றார்கள். இந்த விசயத்தில் சமாளிப்பதற்கு முயற்சி செய்கின்றார்கள். இந்த கவனக்குறைவான நிலை சம்பூரண பூஜைக்குரிய நிலையை வரிசைக்கிரமத்தில் கொண்டு வந்துவிடுகிறது. இது கூட தூய்மையற்ற நிலையின் கணக்கில் சேர்ந்துவிடுகிறது. பூஜிக்கத்தக்க தூய்மையான ஆத்மாக்களின் அடையாளமாக அவர் களிடம் நான்கு விதமான தூய்மையும் இயல்பாக, சகஜமாக மற்றும் சதா இருக்கும் என்று சொல்லப் பட்டது அல்லவா. அவர்கள் சிந்திக்க வேண்டியதிருக்காது, ஆனால், தூய்மையின் தாரணையானது தானாகவே யதார்த்தமான (சரியான) எண்ணம், பேச்சு, கர்மம் மற்றும் கனவை வரவழைக்கிறது. யதார்த்தம் என்றால் ஒன்று யுக்தியுக்த் (ஞானம் நிறைந்த நிலை), இரண்டாவது - யதார்த்தம் என்றால் ஒவ்வொரு எண்ணத்திலும் அர்த்தம் இருக்கும், அர்த்தமற்றதாக இருக்காது. அப்படியே பேசிவிட்டேன், வெளிப்பட்டுவிட்டது, செய்துவிட்டேன், நடந்துவிட்டது என்பது இருக்காது. அத்தகைய தூய்மையான ஆத்மா சதா ஒவ்வொரு கர்மத்தில் அதாவது தினச்சரியத்தில் யதார்த்தமாக யுக்தியுக்தாக இருப்பார்கள். ஆகையினால், பூஜை கூட அவர்களுடைய ஒவ்வொரு கர்மத்திற்கும் நடக்கிறது அதாவது முழு தினச்சரியத்திற்கும் (தினப்படி செயல்பாடு) நடக்கிறது. எழுந்ததில் இருந்து தூங்கும் வரை விதவிதமான கர்மத்தின் தரிசனம் நடைபெறுகிறது. ஒருவேளை, பிராமண வாழ்க்கையில் உருவாக்கப்பட்ட தினச்சரியத்தின் அனுசாரம் எந்தவொரு கர்மமும் யதார்த்தமாக மற்றும் நிரந்தர மாக செய்யவில்லை எனில், அதனுடைய வித்தியாசத்தின் காரணத்தினால் பூஜையிலும் கூட வித்தியாசம் ஏற்படும். உதாரணத்திற்கு, ஒருவர் அமிர்தவேளை எழுவதற்கான தினச்சரியத்தில் விதிப்பூர்வமாக நடக்கவில்லை எனில், பூஜையில் கூட அவருடைய பூஜாரியும் அந்த விதியில் முன்பின்னாக இருப்பார் அதாவது பூஜாரியும் சமயத்தில் எழுந்து பூஜை செய்யமாட்டார், எப்பொழுது வருகின்றாரோ அப்பொழுது செய்வார். அதாவது அமிர்தவேளை விழிப்பான நிலையில் அனுபவம் செய்யவில்லை, வலுக்கட்டாயமாக அல்லது சிலநேரம் சோம்பேறித்தனமாக, சில நேரம் சுறுசுறுப் பாக அமர்ந்தால் பூஜாரியும் கூட வலுக்கட்டாயமாக அல்லது சோம்பேறிதனத்துடன் பூஜை செய்வார், முறைப்படி பூஜை செய்யமாட்டார். இவ்வாறு ஒவ்வொரு தினப்படி கர்மத்தின் பிரபாவமானது பூஜிக்கத்தக்கவர் ஆகுவதில் ஏற்படுகிறது. முறைப்படி நடக்காதிருப்பது, ஏதாவது ஒரு தினச்சரியத் தில் ஏற்ற இறக்கமாகுவது என்பது கூட தூய்மையற்ற நிலையின் அம்சத்தில் கணக்கிடப்படுகிறது. ஏனெனில், அலட்சியம் மற்றும் சோம்பேறித்தனம் கூட விகாரம் ஆகும். எது யதார்த்த கர்மம் இல்லையோ, அது விகாரம் ஆகும். எனவே, தூய்மையற்ற நிலையின் அம்சம் ஆகிவிட்டது அல்லவா. இந்தக் காரணத்தினால் பூஜ்ய பதவியில் வரிசைக்கிரமம் ஆகிவிடுகிறது. எனவே, எது அஸ்திவாரமாக இருக்கிறது? தூய்மை.

தூய்மையின் தாரணையானது மிகவும் ஆழமானது ஆகும். தூய்மையின் ஆதாரத்தில தான் கர்மம் செய்வதற்கான விதி மற்றும் விளைவின் ஆதாரம் உள்ளது. தூய்மை மேலோட்டமாக கடைபிடிக்கக்கூடிய பெரிய விசயம் மட்டும் அல்ல. பிரம்மச்சாரியாக இருப்பது அல்லது மோகமற்றவராக ஆகியிருப்பது - இதை மட்டும் தூய்மை என்று சொல்ல முடியாது. தூய்மை என்பது பிராமண வாழ்க்கையின் அலங்காரம் ஆகும். எனவே, ஒவ்வொரு நேரமும் முகம் மற்றும் நடத்தையின் மூலம் தூய்மையினுடைய அலங்காரத்தின் அனுபவம் பிறருக்கு ஏற்பட வேண்டும். பார்வையில், வாயில், கைகளில், பாதங்களில் சதா தூய்மையின் அலங்காரம் வெளிப்படையாகத் தெரிய வேண்டும். எவர் உங்கள் முகத்தைப் பார்த்தாலும் உங்கள் தோற்றத்தில் இருந்து அவர்களுக்கு தூய்மையின் அனுபவம் ஏற்பட வேண்டும். எவ்வாறு தேகத்தின் பிற அம்சங்களை வர்ணனை செய்கின்றார்களோ, அவ்வாறு, இவர்களுடைய தோற்றத்தில் தூய்மை தென்படுகிறது, கண்களில் தூய்மையின் ஒளி இருக்கிறது, வாயில் தூய்மையின் புன்சிரிப்பு இருக்கிறது என்ற வர்ணனை செய்ய வேண்டும். வேறு எந்த விசயமும் அவர்களுடைய பார்வைக்குத் தெரியவே கூடாது. இவர்களையே தூய்மை என்ற அலங்காரத்தால் அலங்கரிக்கப்பட்ட மூர்த்தி என்று சொல்லப்படுகிறது. புரிந்ததா? தூய்மையைப் பற்றி மேலும் ஆழமான விசயங்கள் உள்ளன. அதை பிறகு கூறிக்கொண்டே இருப்போம். எவ்வாறு கர்மங்களின் நிலையானது ஆழமானதோ, அதுபோல் தூய்மையின் விளக்கமும் (அர்த்தமும்) மிகவும் ஆழமானதாகும் மேலும், தூய்மையே அஸ்திவாரம் ஆகும். நல்லது.

இன்று குஜராத் மாநிலத்திலிருந்து வந்திருக்கின்றீர்கள். குஜராத்தைச் சேர்ந்தவர்கள் எப்பொழுதும் இலகுவானவர்களாகி ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருப்பார்கள். சரீரத்தால் எவ்வளவு தான் பருமனாக இருந்தாலும் இலகுவானவராகி நடனமாடுவார்கள். குஜராத்தின் விசேஷத் தன்மையே சதா இலகுவாக இருப்பது, சதா மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருப்பது மற்றும் தந்தையினுடைய அல்லது தன்னுடைய பிராப்திகளின் பாடலை பாடிக்கொண்டே இருப்பதாகும். குழந்தைப் பருவத்தில் இருந்தே நன்றாக ஆடவும் பாடவும் செய்வார்கள். பிராமண வாழ்க்கையில் என்ன செய்கின்றீர்கள்? பிராமண வாழ்க்கை என்றால் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையாகும். கர்பா நடனம் ஆடும்போது மகிழ்ச்சியில் வந்துவிடுகின்றீர்கள் அல்லவா. ஒருவேளை, மகிழ்ச்சி வரவில்லை என்றால் அதிகமாக ஆட முடியாது. மகிழ்ச்சி மற்றும் போதையில் இருக்கும்பொழுது களைப்பு ஏற்படுவதில்லை, களைப்படையாதவர்கள் ஆகிவிடுகின்றனர். எனவே, பிராமண வாழ்க்கை என்றால் சதா மகிழ்ச்சியில் இருப்பதற்கான வாழ்க்கை ஆகும். அது ஸ்தூல மகிழ்ச்சி மற்றும் பிராமண வாழ்க்கையில் மனதின் மகிழ்ச்சி உள்ளது. சதா மனமானது மகிழ்ச்சியில் நடனமாடிக் கொண்டும், பாடிக்கொண்டும் இருக்க வேண்டும். அந்த மக்கள் இலகுவானவராகி நடனமாடும், பாடும் பயிற்சி உடையவர்கள். ஆகையால், இவர்களுக்கு இந்த பிராமண வாழ்க்கையிலும் கூட டபுள் லைட்டாக (இலகுவாக) ஆகுவது கடினமாக இருப்பதில்லை. எனவே, குஜராத் என்றால் சதா இலகுவாக இருக்கும் பயிற்சி உடையவர்கள் என்றும் கூறலாம், வரதானி என்றும் கூறலாம். எனவே, முழு குஜராத்திற்கும் டபுள் லைட் என்ற வரதானம் கிடைத்து விட்டது. முரளி மூலம் கூட வரதானம் கிடைக்கிறது அல்லவா.

உங்களுடைய இந்த உலகத்தில் சக்திக்கேற்ப, சமயத்திற்கேற்ப என்பது உள்ளது என்று சொல்லப்பட்டது அல்லவா. யதா (எப்படி) மற்றும் ததா (அப்படி). மேலும், வதனத்திலோ யதா, ததா என்ற மொழியே கிடையாது. இங்கு பகல் இருப்பதால் இரவையும் பார்க்க வேண்டியதாக உள்ளது. அங்கே பகலும் இல்லை, இரவும் இல்லை, சூரியனும் உதயமாகுவதில்லை, சந்திரனும் உதயமாகு வதில்லை. இரண்டையும் கடந்த இடமாகும். வரவேண்டியதும் அங்கு தான் அல்லவா. எதுவரை? என்று குழந்தைகள் உரையாடலில் கேட்டீர்கள் அல்லவா. நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று நீங்கள் அனைவரும் கூறினீர்கள் என்றால் இப்பொழுதே செய்துவிடுவோம் என்று பாப்தாதா கூறுகின்றார்கள். பிறகு, எப்பொழுது என்பதற்கான கேள்வியே இல்லை. எதுவரை முழு மாலையும் தயாராகவில்லையோ, அதுவரை எப்பொழுது என்பது இருக்கும். இப்பொழுது பெயரை எடுப்பதற்கு அமர்கின்றீர்கள் என்றால் 108ல் கூட இந்தப் பெயரை எழுதலாமா வேண்டாமா என்று யோசிக்கின்றீர் களா? இப்பொழுது 108 மணிமாலையில் கூட அதே 108 பெயர்களை சொல்லலாமா? இல்லை, வித்தியாசம் ஏற்பட்டுவிடும். பாப்தாதா இப்பொழுது கை தட்டினால் உடனடியாக ஆரம்பம் ஆகிவிடும் - ஒருபுறம் இயற்கை, இன்னொரு புறம் மனிதர்கள். தாமதமாகுமா என்ன? ஆனால், தந்தைக்கு அனைத்து குழந்தைகள் மீதும் அன்பு உள்ளது. கைபிடித்தால் தானே கூடவே செல்வீர்கள். கைக்குள் கை கோர்ப்பது என்றால் சமமானவர் ஆகுவது என்று அர்த்தம். அனைவரும் சமமாக அதாவது அனைவரும் முதல் எண்ணில் வரமாட்டார்கள் என்று நீங்கள் கூறுவீர்கள். ஆனால், முதல் எண்ணிற்குப் பிறகு இரண்டாம் எண்ணும் இருக்கும். நல்லது. தந்தைக்கு சமமாக ஆகவில்லை, ஆனால், முதல் எண்ணில் இருக்கும் மணிக்கு சமமாக இருப்பார்கள். மூன்றாவது மணியோ இரண்டாவது மணிக்கு சமமாக இருக்க வேண்டும். நான்காவது மூன்றாவது மணிக்கு சமமாக இருக்க வேண்டும். இவ்வாறு சமம் ஆனால் ஒருவருக்கொருவர் சமீபத்தில் வர வர மாலை தயாராகிவிடும். இத்தகைய நிலைவரை வர வேண்டும் அதாவது சமமாக ஆக வேண்டும். 108வது மணி 107வது மணியுடன் சந்திக்கும் அல்லவா. அவர்களிடம் உள்ளது போன்ற விசேஷத்தன்மை வந்துவிட்டால் கூட மாலை தயாராகிவிடும். வரிசைக்கிரமமாக ஆகத்தான் வேண்டும். புரிந்ததா? ஆம், நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று இப்பொழுது உத்திரவாதம் கொடுக்கக் கூடியவர்கள் யாராவது இருக்கின்றீர்களா? என்று தந்தை கேட்கின்றார். பாப்தாதாவிற்கோ ஒரு விநாடி தான் ஆகும். கை தட்டியவுடன் தேவதைகள் வந்துவிட்டனர் என்ற காட்சி காட்டப்பட்டது அல்லவா. நல்லது.

நாலாபுறங்களிலும் உள்ள பரம பூஜ்ய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, அனைத்து சம்பூரண தூய்மையின் இலட்சியம் வரை சென்றடைந்திருக்கக் கூடிய தீவிர புருˆôர்த்தி ஆத்மாக்களுக்கு, சதா ஒவ்வொரு கர்மத்திலும் விதிப்பூர்வமாக கர்மம் செய்யக்கூடிய வெற்றி சொரூப ஆத்மாக்களுக்கு, சதா ஒவ்வொரு சமயமும் தூய்மையின் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் விசேˆ ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் சிநேகம் நிறைந்த அன்பு நினைவுகள் உரித்தாகுக.

குழுவுடன் சந்திப்பு

1. விஷ்வத்தில் அனைவரையும் விட அதிக சிரேஷ்டமான பாக்கியவான் என்று தன்னைப் புரிந்திருக்கிறீர்களா? முழு உலகமும் நம்முடைய அதிர்ஷ்டம் திறக்கட்டும் என்று இந்த சிரேஷ்ட மான பாக்கியத்திற்காக அழைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். உங்களுடைய அதிர்ஷ்டமோ திறந்து விட்டது. இதைவிட பெரிய மகிழ்ச்சிக்கான விசயம் வேறு என்ன இருக்கும்! பாக்கியவிதாதாவே நம்முடைய தந்தை ஆவார் என்ற இந்த போதை உள்ளது அல்லவா. யாருடைய பெயரே பாக்கியவிதாதா என்று இருக்கிறதோ, அவருடைய பாக்கியம் என்னவாக இருக்கும்? இதைவிட பெரிய பாக்கியம் ஏதாவது இருக்க முடியுமா? பாக்கியமோ என்னுடைய பிறப்பதிகாரம் ஆகிவிட்டது என்ற இந்தக் குஷி சதா இருக்க வேண்டும். தந்தையிடம் என்னவெல்லாம் ஆஸ்தி உள்ளதோ, குழந்தைகள் அதனுடைய அதிகாரிகளாக இருப்பார்கள். எனில், பாக்கியவிதாதாவிடம் என்ன உள்ளது? பாக்கியத்தின் பொக்கிˆம். அந்த பொக்கிˆத்தின் மீது உங்களுக்கு அதிகாரம் கிடைத்துவிட்டது. எனவே, எப்பொழுதும் ஆஹா! என்னுடைய பாக்கியம் மற்றும் பாக்கியவிதாதா பாபா என்ற இந்தப் பாடலைப் பாடி குஷியில் பறந்து கொண்டே இருங்கள். யாருக்கு இவ்வளவு சிரேஷ்டமான பாக்கியம் கிடைத்துவிட்டதோ, அவர்களுக்கு வேறு என்ன வேண்டும்? பாக்கியத்தில் அனைத்தும் வந்துவிட்டது. பாக்கியவானிடம் உடல், மனம், செல்வம், உறவினர்கள் ஆகிய அனைத்தும் இருக்கும். சிரேஷ்டமான பாக்கியம் என்றால் இல்லாத பொருள் என்று எந்தப் பொருளும் இருக்காது. ஏதாவது அபிராப்தி இருக்கிறதா? நல்ல வீடு வேண்டும், நல்ல கார் வேண்டும் இப்படி அல்ல. யாருக்கு மனதின் மகிழ்ச்சி கிடைத்துவிட்டதோ, அவர்களுக்கு அனைத்து பிராப்திகளும் கிடைத்துவிட்டன. கார் என்ன, ஆனால், அளவிட முடியாத பொக்கிˆம் கிடைத்துவிட்டது. அபிராப்தியான பொருள் என்று எதுவுமே இருக்காது. அத்தகைய பாக்கியவான் ஆவீர்கள். அழியக்கூடிய ஆசை என்ன வைக்கப்போகிறீர்கள்? இன்று என்ன உள்ளதோ, அது நாளை இருப்பதே இல்லை - இதனுடைய ஆசை என்ன வைப்பீர்கள்? ஆகையால், சதா எந்த அழிவற்ற பொக்கிˆங்கள், இப்பொழுதும் உள்ளனவோ மற்றும் கூடவே வருமோ, அதன் குஷிகளில் இருங்கள். இந்தக் கட்டிடம், கார் மற்றும் பணம் உடன் வராது, ஆனால், இந்த அழிவற்ற பொக்கிˆமானது அனேக ஜென்மங்களுக்கு உடன் வரும். எவரும் பறிக்க முடியாது, எவரும் கொள்ளையடிக்க முடியாது. சுயம் தானும் அமரராகிவிட்டீர்கள் மற்றும் பொக்கிˆங்களும் அழிவற்றதாகக் கிடைத்துவிட்டன. ஜென்ம ஜென்மங்களுக்கு இந்த சிரேஷ்டமான பிராப்தி கூடவே இருக்கும். எவ்வளவு பெரிய பாக்கியம்! எங்கு எந்த ஆசையும் இல்லையோ, ஆசை என்றால் என்ன வென்று அறியாத நிலை உள்ளதோ, அத்தகைய சிரேஷ்டமான பாக்கியம் பாக்கியவிதாதா தந்தை மூலம் பிராப்தம் ஆகிவிட்டது.

2. தங்களை தந்தைக்கு அருகாமையில் இருக்கக்கூடிய சிரேஷ்டமான ஆத்மாக்கள் என்ற அனுபவம் செய்கிறீர்களா? தந்தையினுடையவராக ஆகிவிட்டோம் என்ற இந்த குஷி சதா உள்ளதா? துக்கத்தினுடைய உலகத்தில் இருந்து விடுபட்டு சுகத்தின் உலகத்திற்கு வந்துவிட்டீர்கள். உலகம் துக்கத்தில் கூச்சலிட்டுக் கொண்டு இருக்கின்றது. ஆனால், நீங்கள் சுகமான உலகத்தில், சுகத்தின் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருக்கின்றீர்கள். எவ்வளவு வித்தியாசம் உள்ளது! உலகம் தேடிக் கொண்டு இருக்கிறது மற்றும் நீங்கள் சந்திப்பை கொண்டாடிக்கொண்டு இருக்கின்றீர்கள். எனவே, சதா தன்னுடைய அனைத்து பிராப்திகளையும் பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள். என்னென்ன கிடைத்துள்ளன, அதன் பட்டியல் போட்டீர்கள் என்றால் மிகவும் நீளமான பட்டியல் ஆகிவிடும். என்னென்ன கிடைத்துள்ளன? உடலின் குஷி கிடைத்துள்ளது எனவே, உடலின் ஆராக்கியம் உள்ளது ; மனதில் சாந்தி கிடைத்துள்ளது, சாந்தி மனதின் விசேˆத்தன்மை ஆகும் மற்றும் பணத்தில் அவ்வளவு சக்தி வந்துவிட்டது. பருப்பு ரொட்டி கூட 36 வகையான உணவிற்கு சமமாக அனுபவம் ஆகிறது. ஈஸ்வரிய நினைவில் பருப்பு ரொட்டி கூட எவ்வளவு சிரேஷ்டமாகத் தோன்றுகிறது! உலகத் தினுடைய 36 வகையான உணவு உள்ளது மற்றும் உங்களுடைய பருப்பு ரொட்டி உள்ளது எனில், எது சிரேஷ்டமானதாகத் தோன்றும்? பருப்பு ரொட்டி நன்றாக உள்ளது அல்லவா, ஏனெனில், விருப்ப மானதாக உள்ளது அல்லவா. எப்பொழுது உணவு தயாரிக்கின்றீர்களோ, அப்பொழுது நினைவில் இருந்து தயாராக்கின்றீர்கள், நினைவில் இருந்து சாப்பிடுகின்றீர்கள். எனவே, விருப்பமானதாக ஆகிவிட்டது. விருப்பமானதற்கு மகத்துவம் உள்ளது. நீங்கள் அனைவரும் தினமும் பிரசாதம் சாப்பிடுகின்றீர்கள். பிரசாதத்தில் எவ்வளவு சக்தி இருக்கின்றது! எனவே, உடல், மனம், செல்வம் ஆகிய அனைத்திலும் சக்தி வந்துவிட்டது. ஆகையினால், பிராமணர்களின் பொக்கிˆங்களில் அபிராப்தி எதுவும் இல்லை என்று கூறுகின்றீர்கள். எனவே, சதா இந்தப் பிராப்திகளை முன்னால் வைத்து குஷியாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள். நல்லது.

வரதானம்:

கர்மத்தின் மூலம் குணங்களை தானம் செய்யக்கூடிய டபுள் லைட் ஃபரிஷ்தா ஆகுக.

எந்தக் குழந்தைகள் கர்மத்தின் மூலம் குணங்களை தானம் செய்கின்றார்களோ, அவர்களுடைய நடத்தை மற்றும் முகம் ஆகிய இரண்டுமே .ஃபரிஷ்தாக்களைப் போன்று தென்படும். அவர்கள் டபுள் லைட் அதாவது பிரகாசமயமாகவும் மற்றும் இலகுத்தன்மையையும் அனுபவம் செய்வார்கள். அவர்களுக்கு எந்த சுமையின் உணர்வும் இருக்காது. ஒவ்வொரு கர்மத்திலும் உதவி கிடைக்கும் உணர்வு ஏற்படும். ஏதோ ஒரு சக்தி இயக்கிக்கொண்டிருப்பதாக உணர்வார்கள். ஒவ்வொரு கர்மத்தின் மூலம் மகாதானி ஆகும் காரணத்தினால் அவர்களுக்கு அனைவருடைய ஆசீர்வாதம் மற்றும் அனைவருடைய வரதானங்களும் கிடைப்பதாக அனுபவம் ஆகும்.

சுலோகன்:

சேவையில் வெற்றி நட்சத்திரம் ஆகுங்கள், பலவீனமானவர்களாக அல்ல.